பழுதடைந்த காணப்பட்ட 12 பேருந்துகளின் தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலைய மேலாளர் ராம்குமார் ஆகியோர் பேருந்துகளில் தீவிரமாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது பேருந்துகள் சுத்தமாக இருக்கிறதா, மேற்கூரை பழுதாகி உள்ளதா என ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம் நோக்கி சென்ற பேருந்தை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது பேருந்தின் மேற்கூரை பழுதடைந்து இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பின் போக்குவரத்திற்கு தகுதி இல்லாத அந்த பேருந்தை பணிமனைக்கு திருப்பிவிட்டு பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறும் போது, சுமார் 237 அரசு பேருந்துகளில் மேற்கூரை நன்றாக இருக்கிறதா, பிரேக் பிடிக்கிறதா என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு தகுதியில்லாத 12 பேருந்துகளில் தகுதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 7 நாட்களுக்குள் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு பேருந்தை ஆய்வு செய்து மீண்டும் தகுதி சான்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.