தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அதன் பிறகு 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் அது புயலாக மாறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா -தெற்கு ஒடிசா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக , கடலோர பகுதிகளான கடலூர், நாகை, புதுவை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.