உதவி செயற்பொறியாளர் க்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமையில் ஆறுமுகசாமி என்பவர் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு சேரம்பாடியில் மத்திய அரசின் சம்பூர்ணா கிராம ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஒப்பந்தகாரரான சந்திரபோஸ் என்பவரிடம் பணிகள் முடித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமானால் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்திரபோஸ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினரின் அறிவுரைப்படி சந்திரபோஸ் 9,000 ரூபாய் பணத்தை கொடுக்கும் போது ஆறுமுகசாமி கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கினை விசாரித்த ஊட்டி சார்பு நீதிமன்றம் ஆறுமுகசாமிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.