காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வி.சி.வி. நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கிறார். இவர் காஞ்சிக்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சவுமியாவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க சொல்லி வாட்ஸ்-அப் தகவல்களை அனுப்பியுள்ளார். அதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கார்த்திக், சவுமியா வேலை பார்க்கும் வங்கிக்கு நேரில் சென்று தன்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக சவுமியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். இதனிடையில் 15 நாட்களுக்கு பிறகு கார்த்திக் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பெருந்துறையில் உள்ள சவுமியாவின் வீட்டிற்கு கார்த்திக் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் நின்று கொண்டு கார்த்திக், சவுமியாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கார்த்திகை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கார்த்திக் அங்கிருந்து தப்பிஓட முயற்சி செய்தார். எனினும் கார்த்திக்கை துரத்தி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை மீண்டும் கைது செய்தனர்.