கோவையில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. புதிய வகை வைரஸ் வெளி நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் அந்த தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பயணிகள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.