முன்விரோதம் காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு காவேரி இறந்து விட்டார். அதே பகுதியில் தொழிலாளி அருள் வசித்து வந்தார். இதில் அருளுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாதம்மாள் மற்றும் அருள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது மாதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அருளை கைது செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாதம்மாளின் வீட்டுக்கு அருள் சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது தகராறு முற்றியதால் மாதம்மாளும் அவருடைய மகன் வெங்கடேசனும் சேர்ந்து அருளை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும்அவர்கள் அருளின் தலையில் கல்லை போட்டுள்ளனர். இதன் காரணமாக அருள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக அருள் கொலை கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாதம்மாள் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.