குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்றும், இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று எச்சரித்தது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் நாளை உருவாக்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும் என்று எச்சரித்துள்ளது.