இயக்குநர் அமீர் நடிக்கும் ‘நாற்காலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது.
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் அமீர். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் சாதித்துள்ள அமீர், யோகி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இதனிடையே, முகவரி, தொட்டி ஜெயா மற்றும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி சுந்தர் சி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கும் ‘நாற்காலி’ திரைப்படத்தில் அமீர் நடிக்கிறார்.

தீவிர அரசியல்வாதியாக அமீர் மகுடம் சூடும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
