கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெய்யத் தொடங்கிய கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.