அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கார்த்தி – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தம்பி’. இந்தப் படத்தை ‘பாபநாசம்’ படப் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். அக்கா – தம்பி சென்டிமென்டை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படத்தில் ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், சீதா, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் இப்படத்தின் டீஸர் வெளியாகிய நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் கார்த்தி பேசியதாவது, ‘ இரண்டு வருட உழைப்பு இந்தப் படத்துக்கு பின்னாடி இருக்கு. இயக்குநர் ஏற்கெனவே மோகன்லால், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படம் பண்ணிட்டு வந்திருக்கார். அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பைத் தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.
சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கைதிக்கு அப்புறம் இந்தப் படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். கைதி இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும்’ என்றார்.
நடிகை ஜோதிகா பேசியதாவது, ” தம்பி எனக்கு படம் இல்ல, ஒரு சென்டிமென்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். கார்த்தி, தன்னுடன் இணைந்து நடிக்கிற கேரக்டர்களுக்குச் சமமான இடம் கொடுப்பார். அப்படித்தான் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது .
நடிகர் ரஜினி காந்துடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்தபோது முதல் நாள், அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகின்னு பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே ஃபீல் கார்த்தியிடம் உள்ளது.
சத்யராஜுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். என் குழந்தைகள் நீங்க கட்டப்பா கூடய்யா நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க. இயக்குநர் ஜீத்து ஜோசப் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க. அவங்களை பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ‘தம்பி’ எனக்கு ரொம்ப முக்கியமான படம் ” என்று பேசினார்.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது, ‘ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவகுமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா, அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா என்கிற பயம் தான். இப்படி தொடர்ந்து அவரது குடும்பம் பயமுறுத்திட்டு இருக்கிறார்கள்.
இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன், ரசித்தேன். அவர் இயக்கத்தில் நடிக்க முடியுமானு நினைச்சேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சராசரி கேரக்டர் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. ஆனா, இந்தப் படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டரில் நடித்துள்ளேன்.
நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன். ஆனா, இயக்குநர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். இப்படிதான், படத்த கெடுக்கிற எல்லா வேலையையும் பார்ப்பேன். அதைக் கட்டுபடுத்தி, என்ன இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்காங்க.
நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது, ‘இந்தப் படத்தில் நடிச்சதே எனக்குப் பெருமை. கார்த்தி நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்கும் சிரத்தை பார்த்து பிரமித்தேன். பொதுவாக படங்களை விமர்சனம் செய்பவர்கள், கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகொள் வைக்கிறேன். ஒரு திரைப்படம் பார்த்து தற்கொலை செய்து கொண்டவர்கள் யாரும் கிடையாது. ஆனால், படம் எடுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள் உள்ளனர். அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள்’ என்றார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசியதாவது, ‘ ‘உறியடி’ படத்துக்கு பின்னணி இசை பண்ணினதுக்கு அப்புறம், நடிகர் சூர்யா ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அதுதான் எனக்கு சினிமாவில கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்லதான் ’தம்பி’ பட மியூஸிக் பணிகளை பண்ணினேன். கார்த்தி ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன்’ என்று கூறினார்
படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது, ‘ ‘பாபநாசம்’ என்னோட முதல் தமிழ்ப்படம். அதுக்கு அப்புறம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். ஜோதிகா – கார்த்தி ஆகியோர் அக்கா – தம்பியாக நடிக்க வைக்கிற ஐடியா இருக்குனு சூரஜ் சொன்னார். இதை மிஸ் பண்ணக்கூடாதுனு உடனே ஒப்புக்கொண்டேன். சத்யராஜ், சௌகார் ஜானகி இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படமாக இருக்கும்’ என்று கூறினார்.