புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலி கொடுக்காமல் சட்டப்பேரவை செயலகம் பாரபட்சம் செய்வதால் திமுக சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனால் தனக்கு ஒதுக்கீடு செய்து அலுவலகத்தில் சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருகிறார்.
இதுபோன்ற இடையூறுகளைத் தாண்டியும், மக்களுக்கான தமது பணி தொடரும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பாஜக ஆதரவுடன் ஆட்சி நடத்தும் என்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பதாக சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். இதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். பாஜக நியமன எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ களுக்கு அலுவலகம், கார், உதவியாளர்களை கொடுத்துள்ளனர். இதை நாங்கள் கேட்கவில்லை. எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரம்பு மீறப்பட்டு இருக்கிறது என்று திமுக எம்எல்ஏ சம்பத் புகார் தெரிவித்துள்ளார்.