கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் பைசல் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டின் எதிரில் நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பைசல் அகமது வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை பார்த்து பைசல் அகமது அதிர்ச்சியடைந்தார். எனவே கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளையிட்டு மர்ம நபர் உள்ளே புகுந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோன்று ஏற்கனவே இந்த கடையில் சுவரில் துளையிட்டு மர்ம நபர் பொருட்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்கனவே துளையிட்ட இடத்தில் கான்கிரீட் போடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மர்ம நபர் அதன் அருகில் உள்ள இடத்தில் துளையிட்டு கடைக்குள் புகுந்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தன் முகத்தை மூடி சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். இந்த காட்சியானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.