தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர ஏனைய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மற்றும் நாளை மறுநாள் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். வருகின்ற 29ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.