தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்கு யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் யானைகள், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஈரோடு ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மாதேவா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டையொட்டி தோட்டம் இருக்கிறது.
இங்குள்ள மானாவாரி நிலத்தில் மாதேவா மக்காச் சோள பயிரை சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் மாதேவா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மக்காச்சோள பயிர் சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆகவே வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள் தோட்டத்திற்குள் புகுந்து மக்காச்சோள பயிரை தின்றதோடு, அதை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர் நாசமானது. இதுகுறித்து மாதேவா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.