ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவிக்கு கொலை விடுத்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்பு கொலை வழக்கில் மேல் முறையீடு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ரவிசந்திரன் தனது மனைவி பொட்டுமாகாந்தி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவிசந்திரன் பொட்டுமாகாந்தியை தகாத வார்த்தையில் பேசி அரிவாளால் எடுத்து வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பொட்டுமாகாந்தி எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரவிசந்திரனை கைது செய்து பரமக்குடி சிறையில் அடைத்துள்ளனர்.