கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த போராட்டம் குறித்து அவர் கூறும்போது:” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சான்று பெற்று அவர்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் . மேலும் கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேருவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர வண்டிகள், ஊன்றுகோல் கருவி, செயற்கைக்கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினேன். ஆனால் இந்த முகாமை நடத்துவதற்கு அவர் மறுத்துவிட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு தந்து வரும் போது இவர் மட்டும் மறுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான தேதியை வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடர்ந்து உள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் இந்த முகாமை நடத்தும் போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை என்றும், அவர் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.