திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்புட்குழி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கணினி வகுப்பறைகள் மற்றும் காணொளி காட்சி மூலம் நடைபெறும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை அமைச்சரிடம் விளக்கிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் மட்டும் அனைத்து நாட்களிலும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும், மற்ற மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையின்படி சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு வந்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். மேலும் தொற்று முழுமையாக குறைந்தவுடன் சுழற்சி வகுப்புகள் கைவிடப்படும் எனவும் அவர் கூறினார்.