15-வது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனிடையே இந்த சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்று உள்ளது.
அதன்படிஅகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகிறது. இதனிடையே அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது . இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி 15-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்றும், அதில் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் இதுவரை போட்டி அட்டவணை உறுதி செய்யப்படவில்லை.