2000வது ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த போராட்டம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும், போராடும் கட்சி. மற்ற கட்சிகளைப் போன்று வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சி அல்ல, செயலில் காட்டும் கட்சி. அதற்கு பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூறமுடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் எனப்படும் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக நான் பங்கேற்று நடத்திய போராட்டம்தான்.
தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியலில் முப்பத்தி ஆறு சமூகத்தினர் வாழ்கின்றனர். அவர்களில் கணிசமான அளவில் வாழும் பல சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது மிகவும் கொடுமையான விஷயம். இவ்வாறு பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினர் தான் மலைவேடன் சமூகத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் இந்த பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 12.12.2000 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் செய்தோம்.
எனது தலைமையிலான போராட்டத்திலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நான் “பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் பெற்று தரும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து போராடுவேன். பழங்குடியின மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பல லட்சம் பழங்குடியினர் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” இதையடுத்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கியதால், அவர்களுக்கான ஜாதி சான்றிதழ் கிடைக்கப்பெற்றது” என்று கூறியுள்ளார்.