தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தக்காளி பயிர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பு காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விலையை கேட்டவுடன் விட்டு செல்லும் அளவிற்கு உள்ளது. ஆனால் அனைத்து விதமான சமையலுக்கும் தக்காளி முக்கியம் என்பதால் மக்கள் அதனை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.499 மதிப்புள்ள ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் இன்று இலவச தக்காளி விற்பனையை தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலும், மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையிலும் ஒரு ஹெல்மெட் வாங்கினால் 140 ரூபாய் மதிப்புள்ள தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.