தமிழகத்தில் போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளின் பெயர்களை எழுதி இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி விற்பனை செய்ய இயலாது என்பதை எழுதி கடைகளில் ஒட்டியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடைக்கு உள்ளேயும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
மருந்து டெலிவரி செய்யும் சீட்டில் டெலிவிரி என்ற முத்திரையை பதிக்க வேண்டும். போதை மாத்திரை மற்றும் மருந்து தர வேண்டும் என்று யாராவது மிரட்டல் விடுத்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.