சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத்துறையின் மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மின்சார வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது. மின்சாரம் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை என அரசு மருத்துவர்கள் கடந்த விசாரணையின்போது தாக்கல் செய்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராம்குமார் புழல் சிறையில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்போதே தெரிவித்திருந்தனர்.
ஆனால் ராம்குமார் காயத்துடன் சிறையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அப்போது அவர் நாடி மற்றும் இதயம் துடிப்பு இல்லாமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என, சிறைத்துறையின் மருத்துவர் அளித்த ஆவணம் இன்று தாக்கல் செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.