பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக உள்ள திருக்கோவிலூரை அடுத்த தி மண்டபம் பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த காசி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அன்று குடியிருப்புக்குள் நுழைந்து காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி இருளர் குடியிருப்பை சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர்களில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வாகனங்களில் காவலர்கள் அழைத்து சென்றனர். அதில் பெண்களை ஏறிச் சென்ற வாகனத்தை மட்டும் காட்டுக்குள் கொண்டு சென்று நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். இது தொடர்பாக புகார் கொடுக்க முயன்றவர்களை தடுத்து மிரட்டி புகார் கொடுக்க விடாமல் தடுத்து அவர்களை மிகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவ்வாறு வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீதி கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்பதே நீதியை மறுக்கும் செயல்தான்.
திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை முடக்கி வைத்திருப்பது விசாரணை சீர்குலைக்கும் செயல். எனவே இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை உடனே தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.