ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பசுவபாளையம் கிராமத்தில் கலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த தோட்டத்தை ஒட்டி வீடு உள்ளது. இங்கு உள்ள கொட்டகையில் கலாமணி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கலாமணி வழக்கம்போல் கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு உறங்கச் சென்றார். இதனையடுத்து கலாமணி மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதைபோன்று மணி என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடும் இறந்து கிடந்தது.
அதாவது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை கடித்து கொன்றது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுத்தை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விவசாயிகள் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் உள்ள பசுவபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது விவசாயிகள் கூறியபோது “கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. மேலும் காவலுக்கு இருந்த 2 நாய்களில் ஒன்றை சிறுத்தை தாக்கிவிட்டு மற்றொன்றை கொன்று இழுத்து சென்றுள்ளது. ஆகவே சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு வனத்துறையினர் கூறியதாவது “உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.