தேவைப்பட்டால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்..
கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) பூலாங்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஆடுகளை திருடி கொண்டு வந்துள்ளனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி பூமிநாதன் விசாரித்த போது வேகமாக பைக்கில் தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பூமிநாதன் 15 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளபட்டி பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தில் வைத்து 2 சிறார்கள் உட்பட 3 பேரை மடக்கிப் பிடித்துள்ளார்..
அப்போது கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவர்களிடம் விசாரித்துள்ளார்.. மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவருக்கு போன் செய்து தான் பிடித்து விட்டேன் என்றும், இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.. இதற்கிடையே பூமிநாதன் சிறார் ஒருவரது தாயாருக்கு போன்செய்து அறிவுரை கூறியுள்ளார்.. பின் அவர் எதார்த்தமாக திரும்பி நிற்க, பின்னால் காலை வாரி விட்டு மணிகண்டன் அரிவாளால் பின் தலையில் வெட்டியுள்ளார்.. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. பின் அந்த கும்பல் தப்பி சென்றது..
இதையடுத்து தகவலறிந்து அதிகாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.. பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணையை ஆரம்பித்தனர்… 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்… இந்நிலையில் 24 மணி நேரத்தில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்து தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயிருக்கும் தோகூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), 10 வயது சிறுவன் உட்பட இரு சிறுவர்களை கைது செய்தனர்.. மேலும் கைதான முக்கிய குற்றவாளி 19 வயது மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், திருமயம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பூமிநாதன் இல்லத்திற்கு வந்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்..
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு , சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வீரத்தோடும், விவேகத்தோடும் சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.ஆடு திருட்டில் ஈடுபட்ட 3 பேரை 15 கி.மீ துரத்தி சென்று பிடித்து ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ளார். சிறுவர்களுடைய பெற்றோருக்கு செல்போனில் அழைத்து 23 நிமிடங்கள் அறிவுரை கூறியுள்ளார். சட்டத்துறை அறிவுரைப்படி, சட்ட விதிப்படி செய்ய வேண்டியதை முறையாக செய்துள்ளார். சிறுவர்களைப் பொறுத்தவரை மிகவும் அன்போடு கவனத்தோடு காவல்துறை நடந்துகொள்கிறது என்பது இதன் வாயிலாக நமக்கு தெரிகிறது என்றார்.
மேலும் போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும். கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது என்றும் கூறியுள்ளார்..