ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த நிலையில் தலைநகர் ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றது. இதனால் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதி என்ற பிரமாண்ட நகரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் தலைநகரை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 3ஆக பிரிக்கப்போவதாக அறிவித்தார். தன்படி ஜெகன் மோகன் 2019இல் ஆந்திராவின் தலைநகர்களாக விசாகப்பட்டினம் (நிர்வாகம்), அமராவதி (சட்டப்பேரவை) மற்றும் கர்னூல் (நீதித் துறை) என மூன்றாக பிரித்து அறிவித்தார்.
இந்தச் சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது, ஆந்திராவின் தலைமை அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில், “மூன்று தலைநகர் சட்டத்தை மாநில அரசு திரும்ப பெற முடிவெடுத்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார். இதையடுத்து மூன்று தலைநகர் திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜெகன் மோகன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.