விசிக தலைவர் திருமாவளவனை இந்து மதத்திலிருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்து கடவுள் சிலைகள் குறித்து அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், இந்து மக்கள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் நவம்பர் 26 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிமுதல் 12 மணிக்குள் இந்து கோயில்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறு கருத்துகளை பேசி, தரம் தாழ்ந்து அரசியல் செய்யும் திருமாவளவனை, இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு நடைபெற உள்ளதாக அழைப்பிதழ் ஒன்று அச்சிடப்பட்டு, தற்போது அது இணையத்தை ஆக்ரமித்துள்ளது.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆணைக்கிணங்க நடைபெறும் இந்நிகழ்வில் மடாதிபதிகள், துறவி பெருமக்கள், சிவனடியார்கள், வைணவப் பெருமக்கள், இந்து சமய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.