பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் மீதான விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தது.
இதனால் ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசுக்கு 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. இருப்பினும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் ஏற்பட்ட விலைவாசியை குறைக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசால் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவும் வலியுறுத்தி இருந்தது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரி 5 மற்றும் டீசல் மீதான வரியை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என குறைத்தது.
மத்திய வரி விதிப்பிற்குப் பின் “Ad valorem” வரிகளை தமிழ்நாடு விதிப்பதால், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 0.65 ரூபாயும், டீசலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 1.10 ரூபாயும் குறையும். இதனால், மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய அரசானது மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள இயலாத கோரிக்கை.
ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு லிட்டர் டீசல் வாங்கும்போது அதன் சில்லறை விற்பனை விலையை நிர்ணயிப்பதில் பல அம்சங்கள் உள்ளது. எனவே மத்திய அரசின் வரி அளவு இன்னும் தொடர்ந்து அதிகமாகத்தான் உள்ளது. மாநில அரசின் வரி அளவு மேலும் குறிக்கப்படுவது நியாயமல்ல, சாத்தியமும் கிடையாது. மீண்டும் 2014ல் இருந்த அளவிற்குக் குறைத்துக் கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும் என்று வலியுறுத்துகிறேன்.” என அதில் தெரிவித்திருந்தார்.