தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய ஒரு கடிதமும் சிக்கியுள்ளது. அதில் பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாதா இருக்கணும் என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்னை யாரு இந்த முடிவை எடுக்க வச்சான்னு சொல்ல பயமா இருக்கு, நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை. ஆனால் முடியாதில்ல, இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக்கூடாது என்று எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.