திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்காக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கார்த்திகை தீப நிறைவு நாளான நேற்று சிகர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரையை இந்த மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீபத்திற்கு தேவையான நெய் மற்றும் திரி ஆகியவை கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்த பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றுவதற்காக 3000 கிலோ நெய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் இந்த 11 நாட்கள் கோவிலுக்கு வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.