வங்காளதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ,சோயிப் மாலிக் ,ஹைதர்அலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் .
இதன்பிறகு 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பகர் சமான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதில் பகர் சமான் 34 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய குஷ்டில் ஷாவும் 34 ரன்னில் வெளியேறினார்.அதன் பிறகு களமிறங்கிய முகமது நவாஸ்-சதாப் கான் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது .இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.