மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து எம்.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வந்த முதல் நாளே இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியினர் கூறினர். இதுபோன்று சட்டங்களை உருவாக்க மோடி அரசுக்கும் அரசியல் அமைப்புக்கும் உரிமை இல்லை என்றும் மோடியின் ஈகோவை திருப்திபடுத்துவதற்காக இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த சட்டங்களால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனவே மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்திருந்தால் இந்த சட்டங்கள் உருவாக்கப்படாமல், விவசாயிகள் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். பிரதமர் மோடி மிகவும் காலதாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளார். பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கிய போது இந்த அரசு பயப்படும் என்று நான் எப்போதுமே கூறுவேன். இந்த வெற்றி அனைத்தும் விவசாயிகளுக்கு சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.