தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் 10000 ரூபாய் பரிசு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அளவில் 15 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு தொகையும் பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை எதிர்நோக்கி அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது முறைகளுக்கு உட்பட்டு இணை செயல்பாடுகளை கண்டறியும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். அதற்கான முடிவுகளை சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.