சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் கேசவன்(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மாடுகள் நேற்று மதியம் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த சாலையில் கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கேசவனின் மாடுகள் அந்தத் தண்ணீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்து 2 கன்று குட்டிகள் மற்றும் 3 மாடுகள் என 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதானல் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செத்து கிடந்த மாடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மேடவக்கம் கால்நடைத்துறை டாக்டர் மைதிலி இறந்த மாடுகளுக்கு உடற்கூறு பரிசோதனை செய்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து சோளிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் மேடவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சிவபுரணம் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மாடுகளின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறினர். மேலும் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்து அப்பகுதிக்கு விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.