பஞ்சாப் மாநில முதல்-மந்திரியான சரண் ஜித் சிங் சன்னி, கர்தார்பூரின் குருத்வாராவில் தரிசனம் செய்ய பாகிஸ்தானிற்கு இன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் கர்தார்பூர் பகுதி இருக்கிறது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக், தன் இறுதி நாட்களில் இப்பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாக, “தர்பார் சாஹிப்” எனும் பெயரில் ஒரு குருத்வாரா அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது அங்கு சென்று தரிசனம் செய்வது, அவர்களின் புனித கடமையாகும். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற, சீக்கிய புனித தளமான, கர்தார்பூருக்கு இந்தியாவிலிருந்து, ஒவ்வொரு வருடமும் சீக்கிய மதத்தினர் ஆயிரக்கணக்கில் செல்வார்கள்.
இதற்காகவே பஞ்சாப் மாநிலத்திலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரை இணைக்கக்கூடிய சாலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தரிசனம் செய்ய இந்த வழியாக செல்பவர்களுக்கு விசா கிடையாது. இதனிடையே, கொரோனா பரவலால், கடந்த வருடத்திலிருந்து கர்தார்பூர் வழி சாலை அடைக்கப்பட்டிருந்தது.
ஒரு வருடம் கழித்து, நேற்று தான் கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறந்திருக்கிறார்கள். எனவே, நேற்று இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் 28 பேர் அங்கு சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான சரண்ஜித் சிங் சன்னி, அவரது அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகள் உள்பட சுமார் 30 நபர்களுடன் அங்கு சென்றிருக்கிறார். குருத்வாராவில் அவர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.