கேரளாவிற்கு கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த லாரியில் சுமார் 90 மூட்டைகளில் 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருக்கும் போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவர் குறித்தும், ரேஷன் அரிசி கடத்தல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.