ஏ.சி எந்திரத்தை சுத்தம் செய்த போது நல்ல பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் இருக்கும் ஏ.சி எந்திரத்தின் உள்ளே இருந்து இறந்த நிலையில் எலி ஒன்று கட்டிலில் வந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் இறந்து கிடந்த எலியை தூக்கி போட்டுள்ளார். அதன்பிறகு ஸ்ரீதரன் ஏ.சி எந்திரத்தின் உள்ளே சுத்தம் செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில் எந்திரத்தின் உள்ளே வழுவழுப்பாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த ஸ்ரீதரன் மின்சார வயர் என நினைத்து அதனை வெளியே இழுத்துள்ளார். அப்போது தான் அது விஷமுடைய நல்ல பாம்பு என்பது தெரியவந்துள்ளது.
அந்த பாம்பு ஸ்ரீதரனின் இரண்டு விரல்களில் கொத்தியது. அதன் பின் ஸ்ரீதரனின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதற்கிடையில் வனத்துறை ஊழியர்கள் ஏ.சி எந்திரத்தில் பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள நல்லபாம்பு பிடித்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.