லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரையும், கிராம நிர்வாக அலுவலரையும் கலெக்டர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடக்கரையில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியான ராம்ஜி என்பவரை ரத்தினசாமி அணுகி உள்ளார். அப்போது ராம்ஜி, ரத்தினசாமியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ரத்தினசாமி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரையின்படி ரசாயனம் பூசிய 20 ஆயிரம் ரூபாயை ராம்ஜியிடம் ரத்தினசாமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்ஜியை கைது செய்தனர்.
அதன்பின் ராம்ஜியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் லஞ்சம் வாங்க நம்பியூர் துணை தாசில்தார் அழகேசன் உடந்தையாக இருந்ததும், அதற்கு இடைத்தரகராக முத்துக்குமார் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அழகேசனை கைது செய்தனர். அதுமட்டுமின்றி அந்தியூர் ஏ.எஸ்.எம். நகரில் உள்ள துணை தாசில்தார் அழகேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட 2 பேரை பணி இடைநீக்கம் செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.