பெண் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நகுலேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ஜான்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்சி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நகுலேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நகுலேஸ்வரன் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் ஜான்சி தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறிய பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.