ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுரோடு பகுதியில் கோபி மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளனர் . அப்போது இந்த தம்பதிகள் பயண சீட்டு வாங்கினர். இதற்கான மீதி சில்லறை பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து மண்டபப் பகுதி அடைந்தவுடன் தம்பதிகள் நடத்துனரிடம் சில்லறை பாக்கி திருப்பித் தரும்படி கேட்டு உள்ளனர்.
ஆனால் நடத்துனர் சில்லறையை தர மறுத்ததால் நடத்துனருக்கும், தம்பதியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதத்தில் நடத்துனர் ஜெய்சங்கர் தம்பதியினரை மோசமான வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதிகள் மண்டபத்தில் இறங்கி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்பாக கைக் குழந்தையுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் காரணமாக மண்டபம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய தம்பதியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி அரசு பேருந்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.