இந்தியாவில் இளம் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது. தற்போது, கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி ஒருசில ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலநிலை உருவாக்கி வருகிறது.
இந்த வகையில் 2020இல் குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் சைபர் குற்றங்களில் பாலியல் தொடர்பானவை மட்டும் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அணுகி பேசுதல், பாலியல் வீடியோ, படங்களை பகிர்வது போன்ற வகைகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியம் மற்றும் ஒழுக்கமின்மையே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.