தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண நிதி 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களை கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்டத்தின் மூலம் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் 7,876 பேர் சேர்ந்துள்ளனர்.
இவர்களின் படிப்புக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகள்,அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கான படிப்பு கட்டணங்கள் அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதில் தரச் சான்று பெறாத படிப்புகளுக்கு 50,000, வளர்ச்சி நிதி 5 ஆயிரம், விடுதி கட்டணம் 40 ஆயிரம், போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் என கணக்கிடப்பட்டு மொத்தம் 74.48 கோடியை அரசு விடுவிக்கும்.அரசு அளிக்கும் கட்டணத்தை தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.