மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் இருந்த கர்நாடக அரசு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது.
பங்கீட்டு செய்யப்பட்ட 483 டிஎம்சி க்கு மேல் இரு மாநில அளவில் இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடக மாநிலத்திற்கு உரிமை என்பது தீர்ப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக நீர் மடைமாற்றி சேகரிக்கும் வகையில் அமைய உள்ள காவிர- வைகை – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கர்நாடகா அளித்துள்ள மனு தொடர்பாக ஆறு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.