சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும் 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதி கிடையாது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீரோடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக் கூடாது. மேலும் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.