ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு தொல் திருமாவளவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சமூக மாற்றங்களுக்கு மிகப் பெரும் உந்துதலாக ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஜெய் பீம் திரைப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் துணிந்து முன் வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலை நாயகன்’ சூர்யாவையும் அதனை உயிர்ப்புடன் படமாக்கம் செய்த ஞான வேலையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனமார பாராட்டுகிறேன்.
இந்த திரைப்படத்தின் வருவாயிலிருந்து ஒரு கோடி ரூபாயை பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து இருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. சூர்யாவின் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தொண்டு உள்ளத்தை, தொழிலறத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமார பாராட்டுகிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.