ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பெயரை பயன்படுத்தி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் சுருட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவை பிளவு ஏற்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கிருந்து பல்வேறு மோசடிகளை அரங்கேற்றியது கண்டறியப்பட்டது. குறிப்பாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட போட்டஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சிவேந்திர சிங் மற்றும் ரான்வாக்ஸி, லேப் நிறுவன இயக்குனர் மால்விந்தர்சிங் ஆகியோருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து சுகேஷ் 200 கோடி ரூபாய் சுருட்டியது அம்பலமானது.
இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் மீது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மோசடி பற்றி பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. திகார் சிறையில் சிவேந்திர சிங்கை சந்தித்த சுகேஷ் அவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி 200 கோடி ரூபாய் பறிக்க திட்டமிட்டுள்ளன. செல்போன் மற்றும் வாட்ஸ்அப், டெலெக்ராம் உள்ளிட்ட 4 செயலிகளின் மூலம் தனது மோசடி திட்டத்தை சுகேஷ் அரங்கேற்றியது கண்டறியப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திலிருந்து பேசுவது போலவும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வீட்டிலிருந்து பேசுவது போலவும், பேசிய சுகேஷ் அரசின் உயர் மட்டத்தில் இருந்து தங்களுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தல் வந்ததால் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் ஒரு முறை தொலைபேசி உரையாடலை அமித்ஷா கேட்டுக் கொண்டிருப்பதால் கவனமாக பேசும்படி சிவேந்திர சிங்கின் மனைவியிடம் கூறி நம்ப வைத்த சுகேஷ் ஒவ்வொரு முறையும் பேசி முடித்ததும் ஜெய்ஹிந்த் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
பாஜகவுக்கு கட்சி நிதி அளிக்க வேண்டும் என்று கூறி 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு இடையிலான காலத்தில் பல்வேறு தவணைகளில் 201 கோடி ரூபாய் வசூலித்த சுகேஷ் அதில் பெரும்பாலான தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஹவாலா தரகர்கள் மூலம் 10 கோடி ரூபாய் பணத்தைச் சென்னை கொண்டு வந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஆடம்பர பங்களா மற்றும் விலையுயர்ந்த கார்களை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது காதலியான லீனா மரிய பாலன் ஆடம்பர தேவைகளை நிறைவேற்றவே மோசடியை தொடர்ந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ள சுகேஷ் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து சுகேஷ் முதலீடுகளை கண்டறிந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் டெல்லி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.