பெண்ணை கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் ஒரு காலியான இடத்தில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது சாக்குமூட்டைக்குள் 45 வயதுடைய பெண்ணின் சடலம் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மர்மநபர்கள் பெண்ணை அடித்து கொலை செய்து பின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. கடந்த 2 தினங்களாக சாக்குமூட்டை அந்த பகுதிகள் கிடந்துள்ளது. அப்போது யாரோ குப்பைகளை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்றுவிட்டனர் என கருதி அப்பகுதி மக்கள் இதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் பிளாஸ்டிக் கவர் மூலமாக கட்டப்பட்டதோடு உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தது. எனவே மர்ம நபர்கள் வேறு இடத்தில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வாகனத்தின் மூலம் இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் பெண்ணின் உடல் கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பெண் யார் என்பதும்..? கொலை செய்யப்பட்ட காரணம் குறித்தும் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற கொடூர கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.