சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இரவு சமயங்களில் இனிமேல் மின் விளக்குகள் எரியக் கூடாது என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, வீடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு வெளியில் தெரியக்கூடிய ஒளிரும் வெளிப்புற அடையாளங்களையும், இரவில் விளக்குகளின் பயன்பாட்டையும் குறைக்கிறது.
இச்சட்டம், ஜெனிவா நகரில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரைக்கும் வெளிச்சத்தை குறைக்கிறது. இச்சட்டத்தில் விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, தீயணைப்பு துறைகள், சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்கள் மற்றும் அவசரகால மருத்துவ சேவைகள் போன்ற பகுதிகளில் இரவு சமயங்களில் விளக்குகள் எரியலாம்.
மேலும், நள்ளிரவு 1 மணிக்கு பின்பு வியாபாரத்தை தொடங்கும் ஹோட்டல்களுக்கும், மற்ற கட்டிடங்களுக்கும் இந்த விதி விலக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தெரு விளக்குகளும் எரியலாம். இந்த சட்டத்தின் மூலம் Co2-உமிழ்வு குறைக்கப்படுவதோடு, மின்சார சேமிப்பு மற்றும் இரவு நேர மாசுபாடும் குறைகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
இச்சட்டத்திற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், நாடாளுமன்றத்தில் 69 பேர் ஆதரித்துள்ளனர், 23 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததால் இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.