Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க வழக்கு…!!

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் எனக் கண்டறிந்து, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர், தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிதிராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் முடிவு என்ன என்பதை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெற, மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories

Tech |