ரயில் என்ஜின் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்ணுகாரப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் மகள் வேடியம்மாள் வசித்து வந்தார். இவர் பிளஸ்-2 படித்த பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் வேடியம்மாள் சவுளூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை வேடியம்மாள் கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வந்த ஒரு ரயில் என்ஜின் அவர் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட வேடியம்மாள் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் வேடியம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வேடியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.